Monthly Archives: December 2021

2022 வைகுண்ட ஏகாதசி!

2022 வைகுண்ட ஏகாதசி!

மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. கண்ணன் கீதையில் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும்.

பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம். இவ்வாறு செய்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

“ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள். அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிறகோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும்.

ஆண்டுதோறும் ஶ்ரீரங்கத்தில் தை மாதம் முதல் நாளில் பூபதித் திருநன்னாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதுவும் ரக்ஷாபந்தன வைபவமும் (காப்புக்கட்டுதல்) அன்றைய நாளில் வரும். அத்யயன உற்சவத்துக்கும் ரக்ஷாபந்தன வைபவம் உண்டு என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு ரக்ஷாபந்தன வைபவங்களைக் கடைப்பிடிக்க முடியாது. அதேவேளையில் பூபதித் திருநன்னாளையும் தை முதல் தேதியிலிருந்து மாற்ற முடியாது என்பதால் அத்யயன உற்சவத்தை மாற்றியிருக்கிறார்கள். இதேபோன்ற நடைமுறையில் ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசித் திருநாளை மாற்றிக்கொண்டாடுகிற வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் ஶ்ரீரங்கம் சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாளுக்கு தை ஒன்றாம் தேதி ரதோற்சவம் நடத்துவது வழக்கம். அதையும் மாற்றமுடியாது என்பதால் பொதுவாகவே அத்யயன உற்சவத்தை மார்கழி ஒன்றாம் தேதி தொடங்கிவிடுவது வழக்கம். இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் தனிப்பட்ட நடைமுறை சம்பிரதாயங்கள் உண்டு.

எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீரங்கத்தைச் சார்ந்தவர்கள் கடந்த14-ம் தேதியே கொண்டடிவிட்டர்கள்.  மற்றவர்கள் அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்திலும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். எல்லா ஏகாதசி விரத நாள்களுமே மிகவும் முக்கியமானவைதான். எனவே பக்தர்கள் இரண்டு நாள்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவோம். அவரவர்கள் ஊரில் எப்போது சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறதோ அப்போது அதில் கலந்துகொண்டு அவன் அருளைப் பெறுவோம்!”