மாசி மகம் சிறப்பு:
மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும்
மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு வரும். ஆம்,பௌர்ணமி நிலவன்று மக நட்சித்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் தமிழர் நன்னாளே மாசி மகம் எனப்படும்.
சரி, இந்த பெயரே சொல்கிறது மாசி மாதத்தில் தோன்றும் மக நட்சத்திரத்திற்கே மாசி மகமெனப் பெயரென. இந்த மக நட்சத்திரத்தின் தனிப்பட்ட பெருமை என்ன? நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதோ மக நட்சத்திரத்தின் பெருமைகள் உங்கள் பார்வைக்காக.
மக நட்சத்திரத்தின் அருமைகள்:
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும் திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருகளுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.
பௌர்ணமியின் சிறப்பு:
பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக் கூடிய நாளாகும்.
மகமும் பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இந்த நாளில் இறைவனை வேண்டி நிற்போருக்கும். பித்ரு சேவை செய்வோருக்கும் நிறைந்த பலன்கள் கிட்டும்.
மாசிமகத்தை எப்படி கொண்டாடுவர்?
மாசி மகத்தன்று கோயில்களில் சிவ, பார்வதி, விஷ்ணு சிலைகளை புனித நீரில் நீராட்டி பூஜை செய்வது வழக்கம். இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று புனித நீர் நிறைந்த நதியிலோ, குளத்திலோ, கடலிலோ நீராட்டி பூஜை செய்வது வழக்கம். (சில கோவில்களில் கஜ பூஜை அல்லது அஸ்வ பூஜை செய்வது வழக்கம்). பக்தர்கள் அந்த தெய்வங்களை நீராட்டிய புனித நீரில் நீராடுவதால் தங்கள் பாபங்கள் தொலைந்து புண்யம் தேடிக் கொள்கிறார்கள். பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள். இறை அருள் பெறுவார்கள். இந்த நாளில் பார்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷ பலன்கள் கொடுக்கும். ஏதாவது ஒரு தீர்த்தத்தில் நீரடினாலே இந்த நாளில் நற்பலன்கள் கிட்டும்.அந்நாளில் இறை திரு உருவங்களை கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழிபாட்டு முறையாகும்.
மாசி மகம் பித்ரு சேவைக்கு உகந்த நாள்
மாசி மகம் அன்று பித்ருக்கள் பூமிக்கு வந்து தங்கள் கர்மாக்களை தொலைப்பதாக கூறப்படுகிறது. இன்று பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசியும், தொடர்ந்து வந்து படுத்தும் வினைகளுக்கு தீர்வும் கிடைக்கும். இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.
மாசி மகம் கொண்டாடுவதின் புராண வரலாறு:
வல்லாள மகாராஜா என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன் எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி அவர் இறக்கும் தருவாயில் அவர்தம் ஈமச் சடங்குகளை செய்வதாக வாக்களித்தார். அவ்வாறே அந்த அரசர் இறந்த அன்று சிவபெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாக புராணம் கூறுகிறது. இன்று கூட மாசி மகம் அன்று சிவ பெருமான் பூமிக்கு வந்து அந்த அரசருக்கு உரிய சடங்குகளை செய்வதாக கருதப்படுகிறது.
மாசிமகத்தை பற்றி மற்றுமொரு புராணக் குறிப்புமுண்டு. எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மன் அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும் ஒரு கும்பத்தில் அமிருதத்தை நிரப்பி அதை மேரு மலையின் உச்சியில் வைக்கப் பணித்தார். பிரளயத்திற்கு பிறகு, உலகம் அழிந்த நிலையில் மீண்டும் அதனை உருவாக்க அந்த அமிருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரமனும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம்,பிரமன் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் தோன்றிய அன்றே உலகை உருவாக்கினார். அந்த இடம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. இந்த நாளில் சிவனாரின் சக்தி முழுமையாக அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.
என்னப்பன் கந்தனாம் முருகவேள் தனது தகப்பனுக்கு உபதேசம் அளித்த திருநாளும் இதே.
மாசி மகத்தன்றே அன்னை பார்வதி தக்ஷனின் மகள் தாக்ஷாயணியாக அவதரித்தாள். எனவே பெண்டிர் இந்த நாளை விரதத்திற்கு உகந்ததாக கருதி அம்மனுக்கு பூஜை செய்து புண்ணியம் தேடுகிறார்கள்.
மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவர் என்பது ஜோதிட பழமொழி, அவ்வளவு சிறப்பு மிக்கது மக நட்சத்திரம். ஜகன் மாதாவாசிய தேவி தக்ஷபிரஜாபதி எனும் ஓர் அரசனின் மகளாக தோன்ற வேண்டி இருந்தது. எனவே, அலகாபாத் அருகே உள்ள காலிந்தி என்னும் இடத்தில் கங்கையின் கிளை நதியான யமுனா நதியில் புனிதமான ஒரு வலம்புரிச் சங்கின் வடிவில் தோன்றி மன்னனை அடைந்து அவரது வளர்ப்பு மகளானார். அப்படி தேவி பூவுலகில் தோன்றியது ஒரு மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் என்பது புராண வரலாறு.
பகவான் விஷ்ணு பூமியை பாதாளத்திலுருந்து எடுத்து வந்த வராஹ அவதாரத் திருநாளும் இதே.
மஹா மகம்:
மஹா மகம் என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவது. இது தெற்கு இந்தியாவின் கும்ப மேளாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மஹாமக குளத்தில் அருமையாகக் கொண்டாடப்படுகிறது. லக்ஷக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் ஸ்நானம் செய்வதை பாக்யமாகக் கருதுகிறார்கள்.
மாசி மகம் தமிழர் திருநாள்
மாசி மகம் தமிழ் பேசும் நல்லுலகம் உலகின் எந்தெந்த மூலைகளில் இருக்கிறார்களோ அத்தனை பேர்களாலும் கொண்டாடப்படுவது. கும்பகோணம், ஸ்ரீரங்கம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது. சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது.
இப்படியாக மாசி மகம் நம் இல்லல்களை விடுவித்து நன்மைகளை அளிக்கிறது. புண்யத்தை தேடிக் கொடுக்கிறது.